கோரமண்டல் ரயிலில் சென்ற 40 பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்து பலி: ரயில்வே போலீஸ் பதிந்த எப்ஐஆரில் தகவல்

புவனேஸ்வர்: கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த பயணிகளில் 40 பேரின் மீது மின்சாரம் பாய்ந்து பலியாகி இருக்கலாம் என்று ரயில்வே ேபாலீசாரின் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் ஆவர். விபத்தின் போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மட்டும் 40 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வே போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி பப்பு குமார் நாயக் கூறுகையில், ‘கோரமண்டல் ரயிலில் சிக்கி உயரிழந்தவர்களின் உடல்களில், வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை.

அவர்களின் உடம்பில் ஒரு கீறல் காயம் கூட இல்லை. மின்சார ரயில் என்பதால், விபத்து நடந்த போது ரயில் மேல் சென்ற மேல்நிலை கேபிள் அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி பயணிகளின் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று நினைக்கிறோம். எனினும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 40 பேரின் சடலங்களில் எவ்வித காயமும் இல்லை. மீதமுள்ள பலரது உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தன’ என்றார். இதுகுறித்து கிழக்கு ரயில்வேயின் தலைமை செயல்பாட்டு மேலாளர் (ஓய்வு) பூர்ண சந்திர மிஸ்ரா கூறுகையில், ‘ரயிலின் மேற்பகுதியில் மின்சார கேபிள்கள் செல்வதால், விபத்து நடந்த நொடி நேரத்தில் அவை ரயில் பெட்டியில் பாய்ந்திருக்கும். அதன் மூலம் பயணிகள் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம்’ என்றார்.

The post கோரமண்டல் ரயிலில் சென்ற 40 பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்து பலி: ரயில்வே போலீஸ் பதிந்த எப்ஐஆரில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: