புதிய பயிர் ரகங்களும்… அவற்றின் சிறப்புகளும்…

பாசிப்பயறு, தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள் உள்ளிட்ட புதிய பயிர் ரகங்கள், அவற்றின் சிறப்பியல்புகள் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
விவசாயிகளுக்கு பரிந்துரைத்துள்ளது.

பாசிப்பயறு வம்பன் 6

இந்த புது ரகமானது (டிசம்பர்-ஜனவரி)யில் நெல் தரிசு பகுதிகளுக்கு பயிரிட ஏற்றது. இதன் வயது 70-75 நாட்கள் ஆகும்.தரிசு நிலத்தில் பயிரிடலாம். எக்டருக்கு 760 கிலோ மகசூல் கிடைக்கும். ஒருமித்த முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது. காய்கள் வெடிக்காது. ஒற்றை அறுவடைக்கு ஏற்றது. பளபளப்பான விதை கொண்டது. 100 விதைகளின் எடை-3.0-3.5 கிராம் இருக்கும். அதிக புரதச்சத்து (20.63%) கொண்டது. காய்த்துளைப்பான் மற்றும் வெள்ளை ஈ பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறனுடையது. மஞ்சள் தேமல், சாம்பல் மற்றும் இலைச்சுருள் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறனுடையது.

தட்டைப்பயறு வம்பன் 4

இந்த புதிய பயறு ரகமானது ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை) மற்றும் புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்) பருவத்தில் பயிர் செய்ய ஏற்றது. 95-100 நாட்கள் வயதுடையது. இறைவை பயிராக எக்டருக்கு 1377 கிலோ மகசூல் எடுக்கலாம். மானாவாரியில் 1035 கிலோ மகசூல் எடுக்கலாம். ஒருமித்து பூக்கும். பெரிய அளவிலான விதைகள் இருக்கும். 100 விதைகளின் எடை 9.5-11.0 கிராம் கொண்டதாக இருக்கும். அதிக நார்ச்சத்து (5.6%) மற்றும் புரதச் சத்து (18.6%) கொண்டது. காய்த்துளைப்பான் பூச்சி மற்றும் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறனுடையது.

சூரியகாந்தி கோஎச்

இந்த ரகம் ஆடி பட்டம் மற்றும் கார்த்திகை மார்கழி பட்டத்துக்கு பயிர் செய்ய ஏற்றது. 90-95 நாட்கள் வயதுடையது. இறவை பயிராக எக்டருக்கு 2182 கிலோவும், மானாவாரி பயிராக 1898 கிலோவும் மகசூல் கொடுக்கும். சாறு உறிஞ்சும் பூச்சி, இலை உண்ணும் பூச்சி, சாம்பல் நோய் மற்றும் ஆல்டர்னேரியாவுக்கு மிதமான எதிர்ப்புத்திறனுடையது.

எள் விஆர்ஐ 5

இந்த எள் ரகமானது தை, மாசி மற்றும் சித்திரை பட்டங்களில் பயிர் செய்ய ஏற்றது. 120 நாட்கள் வயது கொண்டது. எக்டருக்கு 795 கிலோ மகசூல் தரும். கிளைகளற்ற எள் வகையை சேர்ந்தது என்பதால் நேரடி அடர் விதைப்புக்கும், இயந்திர அறுவடைக்கும் ஏற்றது. வெள்ளைநிற எள் 52 சதவீதம் எண்ணெய் கொடுக்கும். 23.8 புரதச்சத்து கொண்டது. சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய் துளைப்பான், வேரழுகல், பூவிதழ் மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறனுடையது.

கரும்பு கோ 18009

இந்த ரகத்தை புன்னகை என்றும் அழைக்கிறார்கள். இந்த கரும்பு ரகமானது டிசம்பர்-மார்ச் (நடு மற்றும் பின் பட்டம்) பருவத்துக்கு ஏற்றது. 65-70 நாட்கள் வயது கொண்டது. எக்டருக்கு 160.39 டன் கரும்பு மகசூலாக கிடைக்கும். சர்க்கரையாக 20.71 மகசூல் கிடைக்கும். மறுதாம்பு பயிராக பலன் கொடுக்கும். சாறு மிகுதியாக வரும். இதனால் வெல்லம் காய்ச்சி விற்பனை செய்யலாம். இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய ரகமாகவும் உள்ளது. தண்ணீர் பிரச்னையையும் சமாளிக்கும். இயந்திர அறுவடைக்கு உகந்தது. ஆட்கள் கூலியை வெகுவாக குறைக்கலாம்.குறைவான (15 சதவீதம்) தண்டு துளைப்பான் மற்றும் இடைக்கணு புழு தாக்குதல் (30 சதவீதம்), செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறனுடையது.

சணப்பு ஏடிடீ 1

பசுந்தாள் உரங்கள் அனைத்து பயிர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும். இந்த சணப்பு ரகம் அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது. டிசம்பர், ஜனவரி, மார்ச், ஏப்ரல் வரை விதைப்பு செய்யலாம். 120 நாட்கள் வயது கொண்டது. எக்டருக்கு 20.8 டன் மகசூல் தரும். அதிக பசுந்தாள் உரம் கிடைக்கும். குறைந்த பூச்சி நோய்த் தாக்கும் திறன் கொண்டது.

The post புதிய பயிர் ரகங்களும்… அவற்றின் சிறப்புகளும்… appeared first on Dinakaran.

Related Stories: