மணிப்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்!

இம்பால்: மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த (திங்கட்கிழமை) மணிப்பூருக்கு நேரில் சென்ற அமைச்சர் அமித்ஷா, தலைநகர் இம்பால், காங்போக்பி, மோரே, சுராசந்த்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார். இதன்பின், குகி, மெய்தய் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாப்பு படையினருடனான சந்திப்பை கடந்த புதன்கிழமை நடத்தினார்.

தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும் என்றும், இல்லையெனில் தேடுதல் வேட்டை நடத்தி, ஆயுதம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை. இதனால், மேலும் குழப்பத்தைத் தடுக்க மணிப்பூர் அரசாங்கம் இணைய சேவைகளுக்கான தடையை ஜூன் 10ம் தேதி மாலை 3 மணி வரை நீட்டித்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது.

அதில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செரோயு என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் காயம் அடைந்துள்ளனர். இவர்கள், விமானம் மூலம் மந்ரிபுக்ரி என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்! appeared first on Dinakaran.

Related Stories: