கெங்கவல்லியில் சூறைக்காற்றுக்கு 100 ஏக்கரில் பாக்கு, வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

*3 துறை அதிகாரிகள் களஆய்வு

கெங்கவல்லி : கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை, சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கெங்கவல்லி-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் இலுப்புப்தோப்பு முதல் 74.கிருஷ்ணாபுரம் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட புளியமரங்கள், வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) வேலுமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நெடுஞ்சாலையில் விழுந்த மரங்களை பொக்லைன் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

சூறாவளி காற்றுக்கு கெங்கவல்லி வடக்கு, செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி, வாழக்கோம்பை, கடம்பூர், செங்காடு, 74.கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில், 100 ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டிருந்த பாக்கு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தியாகு, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் அன்பரசு, ராஜேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இளவரசு மற்றும் கெங்கவல்லி வேளாண்மை துறை உதவி இயக்குனர் (பொ) தவமணி, உதவி அலுவலர்கள் கல்பனா ஆகியோர் கொண்ட குழுவினர் சேதமடைந்த பகுதிகளில் கள ஆய்வு செய்தனர்.

இதில் கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி கிராமத்தில் செவ்வாழை மரங்கள் அதிக சேதமடைந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, சேத அறிக்கை அனுப்பப்பட்டு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கெங்கவல்லியில் சூறைக்காற்றுக்கு 100 ஏக்கரில் பாக்கு, வாழை மரங்கள் சாய்ந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: