உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 5000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன

ஊட்டி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசு துறைகள் சார்பில் நேற்று 5000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஊட்டி ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட கல்லக்கொரை பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்தினை கையாள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதோடு உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். சுற்றுச்சூழலை காக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

சுற்றுப்புற சூழலை பாதுகாத்திடும் வகையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தமிழக அரசால் மீண்டும் மஞ்சப்பை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் 3 வகையான சுமார் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதேபோல் வருவாய்த்துறை, தோட்டக்கலை, நெடுஞ்சாலை, வனத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

இதில் மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஷ்வரி, ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், தாசில்தார் இந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார், இத்தார் ஊராட்சி தலைவர் பந்தையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊட்டி காக்காதோப்பு பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்தார். தொடர்ந்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அருகில் உள்ள பைன் மர வனத்தில் பரவி கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மை செய்தனர்.

இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், சார்பு நீதிபதி ஸ்ரீதர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகனகிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தமிழினியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 5000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: