காங்கயம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கைது: ₹1 கோடியில் வீடு கட்டியதால் சிக்கினார்

சென்னை: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ளது கொடுவாய். இங்குள்ள சாய்ராம் நகரில் சந்தேகப்படும்படியாக ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு கட்டி வந்தார். இது குறித்து காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. பிடிபட்ட நபர் சென்னை வியாசர்பாடி, கரிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தன் (40) என்பதும், போலீசாரால் எனகவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், தற்போது வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சூச்சி சுரேஷ் என்பவரின் வலது கையாகவும் இவர் செயல்பட்டவர் என்பது தெரியவந்தது.

இவர் மீது கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கொலை, 10-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்கு, வெடிகுண்டு வீசுதல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜனா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாமினில் வந்து தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில்தான் அவர் திருப்பூரில் வசித்து வந்தது தெரிய வந்தது.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்கயம் பகுதியில் தலைமறைவாகியுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வீடு கட்டி குடியேற முடிவு செய்துள்ளார். ஆனார் அதற்குள் போலீசாரின் சந்தேகப்பார்வையில் சிக்கி கைதாகியுள்ளார். ரவுடி ஜனாவை காங்கயம் போலீசார் சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post காங்கயம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கைது: ₹1 கோடியில் வீடு கட்டியதால் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: