தீபாவளி சீட்டு நடத்தி ₹13 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், பாலமுருகன் (40) என்பவர், ஏ.ஆர்.மோட்டார்ஸ் என்ற பெயரில் தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்தவர். இவரிடம் 300க்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு போட்டிருந்தனர். அவர்களுக்கு பணம் தராமல் பாலமுருகன் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, பாலமுருகன் தலைமறைவானது தெரிந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவிலும் புகார் அளித்தனர்.

இருந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து நேற்று காலை கொருக்குப்பேட்டை – கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பாலமுருகன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவறிந்த ஆர்கே நகர் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘பாலமுருகன் தீபாவளி பண்டு, ஏலச் சீட்டு நடத்தி ₹13 கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளார். அவர் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post தீபாவளி சீட்டு நடத்தி ₹13 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: