பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயிலில் இலவச டிக்கெட் திட்டம்: நிர்வாகம் ஆலோசனை

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையம் அருகில் வசிப்பவர்களுக்கு இலவச டிக்கெட் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம், கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னை விமான நிலையம் விம்கோ நகர் பணிமனை மற்றும் பரங்கிமலை சென்னை சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலே பொதுமக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

மெட்ரோ ரயிலில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 66.07 லட்சம் பேரும், பிப்ரவரி மாதம் 63.69 லட்சம் பேரும், மார்ச் மாதம் 69.99 லட்சம் பேரும், ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேரும், மே மாதம் 72.68 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதம் 24ம் தேதி 2.64 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மே மாதம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 26.76 லட்சம் பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 42.18 லட்சம் பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 3.61 லட்சம் பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6218 பேரும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 5,138 பேரும் பயணம் செய்து உள்ளனர். ஏப்ரல் மாதத்தை விட கடந்த மே மாதம் 5.82 லட்சம் பயணங்கள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதற்காக இலவச டிக்கெட்களை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்:
இந்த இலவச டிக்கெட்களை சந்தைப்படுத்துதல் என்பது ஒரு சில குறிப்பிட்ட பயணிகளுக்கு மட்டுமே. அதாவது, மெட்ரோ ரயில் நிலையத்தின் குறிப்பிட்ட சுற்றளவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் ஆகியோர் இந்த இலவச டிக்கெட்டில் பயணம் செல்லலாம். இதுகுறித்து குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்த முறை குறித்த சாத்தியமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பிறகு இந்த இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஆரம்ப காலகட்டத்தில் பயணிகள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் டிக்கெட்கள் வெளியிடப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படும்.

இதன்மூலம் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்த இலவச ரயில் டிக்கெட் பயணிகளின் செல்போன் எண்ணுடன் இணைக்கப்படுவதோடு, அதனை மாற்ற இயலாது. குறிப்பிட்ட ரயில் நிலையத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட நிலையம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அது ஏதாவது ஒரு நபரின் வசிப்பிடத்திலிருந்து அவரது அலுவலகம் வரை இருக்கலாம். கல்வி நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை இருக்கலாம். நாங்கள் தற்போது அந்த முயற்சிக்கான விதிகள் மற்றும் வணிக முன்மொழிவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேவையான ஒப்புதல்கள் கிடைத்த பிறகு விரைவில் இது தொடங்கப்படும்,’’ என்றனர்.

The post பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயிலில் இலவச டிக்கெட் திட்டம்: நிர்வாகம் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: