ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலி; பிரதமர் மோடிக்கு கார்கே 11 கேள்வி: குற்றங்களை விசாரிக்கும் சிபிஐயிடம் ரயில் விபத்தை விசாரிக்க சொல்வதா?

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடிக்கு 11 கேள்விகள் கேட்டு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார். ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் 275 பேர் பலியாகி விட்டனர்.

இதுபற்றி பிரதமர் மோடிக்கு 11 கேள்விகள் கேட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஒடிசா பாலசோரில் நடந்த ரயில் விபத்து இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் மோசமான ஒன்று. இந்த விபத்து நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. இந்த ரயில் விபத்து விவகாரத்தில் சில முக்கிய தகவல்களை உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

1இந்திய ரயில்வேயில் தற்போது 3 லட்சத்திற்கும் மேலான காலி பணியிடங்கள் உள்ளன. உயர் பதவிகள் உள்பட முக்கிய பணியிடங்கள் இன்னும் நிரப்பாமல் காலியாக இருப்பதற்கு அக்கறையின்மை, அலட்சியம் தான் இதற்கு காரணம். பிரதமர் அலுவலகமும், அமைச்சரவை குழுவும் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 18 லட்சம் ஊழியர்கள் இருந்த ரயில்வேயில் தற்போது 12 லட்சம் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதிலும் 3.18 லட்சம் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக இவ்வளவு காலிபணியிடங்களை நிரப்பாமல் விட்டது ஏன்?
2பணியாளர் பற்றாக்குறை காரணமாக லோகோ பைலட்டுகள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது என்பதை ரயில்வே வாரியமே சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. லோகோ பைலட்டுகள் பாதுகாப்பிற்கு முக்கியமானவர்கள். ஆனால் அவர்களுக்கு அதிக வேலைப்பளு சுமத்தப்படுவதே விபத்துகளுக்கு முக்கிய காரணம்.
3இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 8 அன்று, தென்மேற்கு மண்டல ரயில்வேயின் முதன்மை தலைமை இயக்க மேலாளர், மைசூரில் இரண்டு ரயில்கள் மோதிக்கொள்ள இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்டது குறித்தும், இந்த விவகாரத்தில் சிக்னல் அமைப்பை சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் குறித்தும் முன்னறிவித்தார். ஆனால் இந்த முக்கியமான எச்சரிக்கையை ரயில்வே அமைச்சகம் ஏன், எப்படி புறக்கணித்தது?.
4ரயில்வே பாதுகாப்பு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருந்ததை நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த டிசம்பரில் தாக்கல் செய்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ரயில்வேயின் அலட்சியம் காரணமாக 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை விபத்துகள் நடப்பதாக அதில் கூறப்பட்டு இருந்தது. அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
5. சமீபத்திய சிஏஜி அறிக்கையில் 2017 முதல் 2021 வரை ரயில் விபத்துகள் 10ல் 7 விபத்துகள் ரயில் தடம்புரண்டதால் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை புறக்கணித்தது ஏன்?. 2017 முதல் 2021ம் ஆண்டு வரை ஒடிசா ரயில்விபத்து நடந்த கிழக்கு கடற்கரை பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது ஏன்?
6. ராஷ்ட்ரிய ரயில் சன்ரக்ஷா கோஷ்க்கான நிதி 79 சதவீதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்பதை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறப்பட்டு, அது நிறைவேற்றப்படவில்லை. ரயில் தண்டவாளங்களை புதுப்பிக்கும் பணிக்கு தேவையான நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை?.
7. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரயில்விபத்தை தடுக்க ராக்‌ஷா கவச் என்று பெயாிடப்பட்ட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 2011ல் கொங்கன் ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த திட்டத்தை 2022 மார்ச் மாதம் கவச் என்று பெயர் மாற்றம் செய்த உங்கள் அரசு, அதை வெறும் 4 சதவீத வழித்தடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது.
8. ரயில்வே பட்ஜெட்டை கடந்த 2017-18ம் ஆண்டு பொதுபட்ஜெட்டுடன் இணைத்ததற்கு காரணம் என்ன?. இதுதான் ரயில்வே தனியாக இயங்கவும், முடிவெடுக்க கூடிய சூழலில் இல்லாத நிலைக்கும் தள்ளி உள்ளதை மறுக்க முடியுமா? மேலும் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு தெரிவித்தும், ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு காரணம் என்ன? 2050ம் ஆண்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தேசிய ரயில் திட்டம் எந்த வித ஆலோசனையும் இல்லாமல் எளிதாக தனியார் மயமாக்கும் நடவடிக்கை என்பதை மறுக்க முடியுமா?
9. சுதந்திரம் பெற்றதில் இருந்து அனைத்து மக்களின் நலனுக்காக சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு பயன்பெறும் இந்த திட்டத்தை கொரோனா தொற்று காலத்தில் திரும்ப பெற்றது ஏன்?. மேலும் பெண்கள், முதியவர்களுக்கு கூட மேல் படுக்கை(அப்பர் பெர்த்) வசதியை வழங்குவது என்ன திட்டம்?
10. நீங்கள் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் போன்றவர்கள் இவ்வளவு பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. ரயில்வே அமைச்சர் ஏற்கனவே ஒரு காரணத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார். ஆனால் சிபிஐ விசாரிக்கக் கோரியுள்ளார். சிபிஐ குற்றங்களைத்தான் விசாரிக்க வேண்டும். ரயில்வே விபத்துகளை அல்ல. தொழில்நுட்ப பிரச்னை, நிர்வாக பிரச்னை, அரசியல் தோல்விகளுக்கு சிபிஐ அல்லது வேறு எந்த சட்ட அமலாக்க நிறுவனமும் பொறுப்பேற்க முடியாது. கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு, சிக்னல், பராமரிப்பு நடைமுறைகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐயில் தொழில்நுட்ப நிபுணர்கள் இல்லை.
11. கடந்த 2016 ஆம் ஆண்டு கான்பூரில் ரயில் தடம் புரண்டதில் 150 பேர் உயிரிழந்த விபத்தை என்ஐஏ விசாரித்தது. 2017ல் நடந்த தேர்தல் பேரணியில், ரயில் தடம்புரண்டதில் ‘சதி’ நடந்ததாக நீங்களே கூறினீர்கள். கடுமையான தண்டனை வழங்கப்படும் என, தேசத்துக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், 2018ல், என்ஐஏ விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மறுத்து விட்டது. அந்த விபத்து எப்படி நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. 150 இறப்புகளுக்கு யார் பொறுப்பு?

இதன்மூலம் ஒடிசா விபத்திற்கும் தேவையான நிபுணத்துவம் இல்லாத மற்றொரு அமைப்பிடம் நீங்கள் விசாரிக்க உத்தரவிட்டு இருப்பது 2016ல் கான்பூர் ரயில் விபத்து விசாரணையை நினைவூட்டுகிறது. மேலும் உங்கள் அரசாங்கத்திற்கு முறையான பாதுகாப்புச் சரிவைத் தீர்க்கும் எண்ணம் இல்லை என்பதை அவை காட்டுகின்றன. மாறாக பொறுப்புக்கூறலைச் சரிசெய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் தடம்புரளச் செய்து திசைதிருப்பும் தந்திரங்கள் இவை என்பதையும் காட்டுகிறது. ஒடிசா ரயில்விபத்து இப்போது அனைவரது கண்ணையும் திறந்து விட்டு விட்டது. ரயில்வே பாதுகாப்பு குறித்து அமைச்சர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறுமையானவை என்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் 4 பக்க கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலி; பிரதமர் மோடிக்கு கார்கே 11 கேள்வி: குற்றங்களை விசாரிக்கும் சிபிஐயிடம் ரயில் விபத்தை விசாரிக்க சொல்வதா? appeared first on Dinakaran.

Related Stories: