போராட்டத்தை கைவிட்டதாக தவறான தகவல் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: மல்யுத்த வீரர்கள் பஜ்ரங், சாக்ஷி மாலிக் அறிவிப்பு

புதுடெல்லி: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், மல்யுத்த வீரர்கள் யாரும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி, பஜ்ரங் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ எம்பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது புகார் கூறப்பட்டது. அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. “சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே, பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்த மல்யுத்த வீரர்களை விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் வீரர்களை சந்தித்த போது பிரிஜ்பூஷன் சிங் மீது பாரபட்சமின்றி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், வீராங்கனை சாக்ஷி மாலிக் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்பியதாக செய்தி வெளியானது. இதற்கு சாக்ஷி, பஜ்ரங் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சாக்ஷி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் மீண்டும் ரயில்வே பணியில் சேர்ந்தது உண்மைதான். ஆனால், போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தவறான தகவலை பரப்ப வேண்டாம்,” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல், பஜ்ரங் புனியா கூறுகையில், “இந்த செய்தி எங்களை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பரப்பப்படுகிறது. இப்போது வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கவோ அல்லது திரும்பப் பெறவோ இல்லை. எப்ஐஆர். வீராங்கனைகளால் திரும்ப பெறப்பட்டது என்று செய்தியும் தவறானது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்,” என்று தெரிவித்தார்.

The post போராட்டத்தை கைவிட்டதாக தவறான தகவல் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: மல்யுத்த வீரர்கள் பஜ்ரங், சாக்ஷி மாலிக் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: