பெண்ணின் நிர்வாணம் ஆபாசம் அல்ல: கேரள பெண் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரஹனா பாத்திமா. இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் அவர் இருமுடிக் கட்டுடன் சபரிமலைக்கு செல்ல முயன்றார். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அவரால் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத நம்பிக்கைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பிஎஸ்என்எல் நிர்வாகம் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ரஹனா பாத்திமா நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ மற்றும் ஐடி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கவுசர் நேற்று அளித்த தீர்ப்பு:
ஆண்கள் சட்டை அணியாமல் சென்றால் அதை ஆபாசம் அல்லது கண்ணிய குறைவாக இந்த சமூகம் பார்ப்பதில்லை. இந்த கண்ணோட்டம் பெண்கள் அப்படி இருந்தால் கவர்ச்சி, ஆபாசமாக கருதப்படுகிறது. பெண்களின் நிர்வாணம் எப்போதுமே கவர்ச்சி, ஆபாசம் ஆகாது. ஒழுக்கக்கேடாகவும் கண்ணியகுறைவாகவும் அதை கருதக்கூடாது. பெண்கள் தங்கள் உடல் மீது உரிமை கொண்டாடும்போது அவர்கள் அடக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்.

நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு. ஒரு தாயின் அரை நிர்வாண மேல் உடம்பில் அவரது குழந்தைகள் கலைப் படைப்புக்காக வர்ணம் தீட்டுவது பாலியல் செயலை தூண்டுவது கிடையாது. இதில், குழந்தைகள் பாலியல் விஷயத்துக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என கூற முடியாது. அந்த வீடியோவில் பாலியல் சார்ந்த எந்த விஷயங்களும் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்படி பெண்கள் தங்களுடைய சொந்த உடல் தொடர்பாக முடிவு எடுக்க அடிப்படை உரிமை உள்ளது. எனவே ரஹனா பாத்திமா மீதான வழக்குகளை ரத்து செய்கிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post பெண்ணின் நிர்வாணம் ஆபாசம் அல்ல: கேரள பெண் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: