ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி 275 பேர் பலி; மீண்டும் ரயில்கள் இயக்கம்: 51 மணி நேரத்தில் தண்டவாளங்கள் சீரமைப்பு

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து நடந்து 51 மணி நேரத்திற்கு பின்னர் சரக்கு ரயில், வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரயிலை ரயில்வே அமைச்சர் கைகூப்பி வண ங்கி அனுப்பி வைத்தார்.ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜாரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கர ரயில் விபத்து நடந்தது சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். மேற்குவங்கம் மற்றும் தென்மாநிலங்களை இணைக்கும் இந்த வழித்தடம் ரயில்விபத்தால் சேதமடைந்தது.

இதை சரிசெய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு, மீண்டும் ரயில் சேவைகளை மீட்டெடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விபத்து நடந்த நாளில் இருந்தே, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சம்பவ இடத்திலேயே இருந்து நிலைமைகளை கண்காணித்து வந்தார். முதற்கட்டமாக சேதம் அடைந்த தண்டவாளங்களை மறு சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10.40 மணியளவில் விபத்து நடந்து கிட்டத்தட்ட 51 மணி நேரத்திற்கு பின்னர், தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்ட இருவழிப்பாதைகளும் தயாரானது. தொடர்ந்து அந்த தண்டவாளத்தில் முதன்முதலாக விசாகப்பட்டினத்தில் இருந்து ரூர்கேலா ஆலைக்கு நிலக்கரி கொண்டு சென்ற சரக்கு ரயில் இயக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தை கடந்த போது சரக்கு ரயில் மெதுவாக இயக்கப்பட்டது. அந்த ரயில் பாதையில் கடந்து சென்றதும், கடவுளுக்கு நன்றி தெரிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது இரு கைகளையும் கூப்பி வணங்கினார்.

அதை தொடர்ந்து புரிவந்தேபாரத் ரயில் நே்று காலை 9.30 மணிக்கு பஹானகா நகர் ரயில் நிலையத்தை தாண்டி விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது. விபத்து நடந்த பிறகு இயக்கப்பட்ட அதிவேக ரயில் இதுவாகும். அப்போதும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அங்கு இருந்தார். அவர் டிரைவர்களை நோக்கி கையசைத்தார். விபத்து நடந்த இடத்தை ரயில்கள் குறைந்த வேகத்தில் கடக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று காலை ஒடிசாவின் துங்குரியில் இருந்து பார்கருக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் சில பெட்டிகள், சம்பர்தாரா அருகே திடீரென தடம் புரண்டன. ஆனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சரக்கு ரயிலின் 5 வேகன்கள் தடம் புரண்டதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர். மேலும் விபத்து நடந்தது தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள தண்டவாளத்தில் என்பதால், அதற்கும் ரயில்வேக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடல்களை அடையாளம் காண 2 நாள் தான் கெடு
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பலி எண்ணிக்கை குளறுபடி பற்றி கேள்வி எழுப்பிய போது அவர் நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில்,’ ஒடிசாவில் கடும் வெப்ப சூழல் உள்ளதால் உடல்கள் வேகமாக கெட்டுவருகிறது. எனவே அதிகபட்சம் இன்னும் கூடுதலாக 2 நாட்கள் ஒடிசா அரசு காத்திருக்கும். அதற்குள் அடையாளம் காணப்படாவிட்டால் சட்டவிதிப்படி உடல்கள் அப்புறப்படுத்தப்படும்’ என்றார்.

இன்ஜின் டிரைவர்களிடம்விசாரணை
புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இன்ஜின் டிரைவர் மொகந்தி, உதவியாளர் ஹஜாரி பெஹரா ஆகியோரிடம் ஒடிசா ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தினார். அப்போது அவர்களது வாக்குமூலங்களை அவர் பதிவு செய்தார். இதை தென்கிழக்கு ரயில்வேயின் (எஸ்இஆர்) தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) ஆதித்யா சவுத்ரி கூறும்போது,’ விதிகளுக்கு உட்பட்டு இன்ஜினை இயக்கியதால் விபத்துக்கு ஓட்டுனர்களை குறை கூற முடியாது’ என்றார். மேலும் ரயில்வே சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பாலசோர் அரசு ரயில்வே காவல் நிலையத்தில் ஒடிசா ரயில் விபத்து குறித்து 7 வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை: மம்தா அறிவிப்பு
ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவித்துள்ளார். இந்த பயங்கர விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் உறவினர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்து தற்போது மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் தனது அரசாங்கம் பண உதவி அளிக்கும் என்று அவர் கூறினார். விபத்து தொடர்பாக எந்த அரசியலிலும் ஈடுபட விரும்பவில்லை. காயமடைந்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
ஒடிசா பாலசோர் ரயில் விபத்து தொடர்பான சிபிஐயின் ஆரம்ப கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கம்ப்யூட்டரில் வேண்டுமென்றே குறுக்கீடு இல்லாவிட்டால், மெயின் லைனுக்கான பாதையை லூப் லைனுக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்றும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிரைவரின் தவறு அல்லது இன்டர்லாக் அமைப்பில் உள்ள செயலிழப்பு ஆகியவற்றை ரயில்வே அமைச்சகம் முன்பு நிராகரித்திருந்தாலும், அனைத்து கோணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி 275 பேர் பலி; மீண்டும் ரயில்கள் இயக்கம்: 51 மணி நேரத்தில் தண்டவாளங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: