கேரளாவில் இன்று அதிகாலை விபத்து வேன் மீது கார் மோதி நகைச்சுவை நடிகர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சுதி. பிரபல மிமிக்ரி கலைஞர் ஆவார். மலையாள டிவிக்களில் ஏராளமான நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். மோகன்லால் நடித்த பிக் பிரதர், நிழல், கொள்ளை உள்பட பல மலையாளப் படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தநிலையில் நேற்று இரவு கோழிக்கோடு அருகே உள்ள வடகரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருந்தார். நிகழ்ச்சியை முடித்த பிறகு இன்று அதிகாலை ஒரு காரில் சக கலைஞர்களான பினு, மகேஷ் ஆகியோருடன் ஊருக்கு புறப்பட்டார். இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் திருச்சூர் அருகே கைப்பமங்கலம் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் சுதி உள்பட காரில் இருந்த 3 பேரும் காயமடைந்தனர். இதை அறிந்த அந்த பகுதியினர் விரைந்து வந்து அனைவரையும் மீட்டனர். தொடர்ந்து கொடுங்கல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் கொல்லம் சுதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற நடிகர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கைப்பமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவில் இன்று அதிகாலை விபத்து வேன் மீது கார் மோதி நகைச்சுவை நடிகர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: