‘என் பையன் இப்போல்லாம் இவ்வளவுதான் சாப்பிடணும்னு ஸ்டிரிக்டா ஆர்டர் போட்டுட்டேன்!’, ‘என் பொண்ணு லைட்டா குண்டானா, நான் பக்கா டயட் ஷீட் போட்டு அவளை ஃபாலோ பண்ண சொல்லிட்டேன்’…. சாப்பிடவே மாட்டேங்கறான் என்னும் புலம்பல்களுக்கு இடையே இப்படியும் சில உரையாடல்கள் கேட்கத்தான் செய்கின்றன. காரணம் இப்போதெல்லம் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதில்லை, பெரும்பாலும் மொபைல் அல்லது டேப்லெட் என பொழுதைக் கழிக்கிறார்கள். இதனால் சில குழந்தைகள் வழக்கத்தை விட அதிகமாக எடை அதிகமாதல், உடல் சோர்வும் அடைகின்றனர். குழந்தைகளுக்கு டயட், உணவுக் கட்டுப்பாடுகள் இதெல்லாம் நல்லதா, கெட்டதா? கேள்விகளுடன் நிபுணர்களை அணுகினோம் ‘மரியா பிரியங்கா’ (Nutritionist/ diet counselor Founder & Owner of Healthychef cloud kitchen):
குழந்தைகளுக்கு டயட்டோ உணவுக் கட்டுப்பாடு எதுவும் கொடுக்கவே கூடாது. குறிப்பாக 12 வயது வரை உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் உணவு மிகவும் அத்தியாவசியம் தேவையற்ற உணவுக் கட்டுப்பாடுகளும் டயட்டும் கொடுப்பது எதிர்காலத்தில் ஆபத்தை உண்டாக்கும். மேலும் குழந்தைகள் நன்றாக சாப்பிட வேண்டிய வயதே இந்த ஒன்று முதல் 12 வயதுதான். அதில் தேவையில்லாத கட்டுப்பாடு உடலளவிலும், மனத்தளவிலும் கூட பிரச்னையை உண்டாக்கும். காரணம் ஏற்கனவே குழந்தைகள் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் அடைபட்டுக் கிடந்தனர். இதில் ஆன்லைன் வகுப்புகள், நண்பர்களின் சந்திப்புகள் இல்லை என அத்தனையுமாக அவர்களை மனத்தளவில் கொஞ்சம் பாதித்திருக்கும். இப்போதுதான் கொஞ்சம் வெளியே வந்து, பள்ளி, நண்பர்கள் சந்திப்பு என நிகழத் துவங்கியிருக்கிறது. இதில் சில குழந்தைகளுக்கு எல்லாம் பள்ளி வாசமே இப்போதுதான் நிகழ்ந்திருக்கும். இதில் ஒரே சந்தோஷமான உணவிலும் கட்டுப்பாடுகள், அட்டவணைகள் எனக் கொடுத்தால் மேற்கொண்டு மன உளைச்சலை உண்டாக்கும்’ என்னும் மரியா எப்படிப்பட்ட உணவுகள் ஊட்டச்சத்துகள் கொடுக்க வேண்டும், மேலும் என்னென்ன ஊட்டச்சத்துகள் குழந்தைகளுக்கான உணவில் இருப்பது நலம் என தொடர்ந்து பேசினார்.
‘கேட்ஜெட்கள், மொபைல், டிவி, கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகம் என்பதால் நம்மை அறியாமலேயே உடலில் அதிக வெப்பம் ஏற்படும். இளநீர், சிட்ரஸ் அமிலம் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள், சீசனுக்கு கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, கிர்ணி, நுங்கு போன்ற பழங்களை குழந்தைகளின் உணவில் சேர்ப்பது நல்லது. பொட்டாசியம் இருக்கும் வாழைப்பழம் அத்தியாவசிய ஒன்று.இது தவிர வெறுமனே சாதம், இட்லி, தோசை எனக் கொடுக்காமல் காய்கறிகள், கீரைகள் சேர்க்கை அதிகம் இருத்தல் நலம். முட்டை, பால், இறைச்சி வகைகளும் அதிகம் சேர்க்கலாம். இறைச்சி வேண்டாம் எனில் பனீர், நெய், வெண்ணெய், போன்றவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு வெளிப்புற ஆகாரங்களை தவிர்க்க வேண்டும். ஒரு நாள் வேண்டாம் என அவர்களுக்கு கட்டுப்பாடு போட்டுவிட்டு மறுநாள் நமக்கு ஆர்வம் ஏற்படுகையில் அந்தக் கட்டுப்பாட்டை உடைக்காமல் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் சனி, ஞாயிறுதானே என 11, 12 மணி வரை தூங்க வைத்துவிட்டு நேரடியாக லன்ச் கொடுப்பது கூடவே கூடாது. பள்ளி இருக்கோ இல்லையோ காலை எட்டு மணிக்குள் எழுப்பி காலை உணவைக் கொடுத்துவிட்டுக் கூட தூங்க வைக்கலாம்.’.
‘எவ்வளவு சீக்கிரம் தூங்கி எவ்வளவு சீக்கிரம் எழுதிருக்கிறோமோ அவ்வளவு உடலுக்கு நல்லது. எங்கே இங்கேதான் நாமும் சேர்ந்து இரவு 12, 1 மணி வரையேனும் சீரியல், படம் என பார்க்கிறோம். குழந்தைகளும் அதற்கு பழக்கமாகி விடுகின்றனர். சாப்பாடு, தூக்கம் இரண்டும் சரியாக நேரத்தில் நடந்தால் குறிப்பாக குழந்தைகளுக்கு இவ்விரண்டும் எவ்வளவு அதிகம் கிடைக்கிறதோ அவ்வளவு நல்லது. உடல் பருமன் குறித்து எல்லாம் கவலை தேவை இல்லை. தொடர்ந்து ஒரு வாரம் சரியான தூக்கம் இல்லாமல் போனாலே உடலில் அவ்வளவு பிரச்னைகள் உண்டாகும். முதலில் கருவளையம், தோலில் வறட்சி, அலர்ஜி, மூளை செயல்படுவதில் தேக்கம், எனத் துவங்கி சிறுநீரகக் கோளாறு, வளர்சிதை மாற்றம், இப்படிச் சின்ன வயதிலேயே 30 வயதுக்கு மேல் வேலைப்பளுவால் உண்டாகும் பிரச்னைகள் அத்தனையும் குழந்தைகளுக்கு இப்போது உண்டாகிவிடும் என்னும் மரியா என்னென்ன மாற்றங்களை கொண்டு வரலாம் எனத் தொடர்ந்து பேசினார்.
முதலில் குழந்தைகள் பருமனாக காரணம் தூக்கமின்மையும், நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாததும்தான் காரணம். சில குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே தொப்பை இருப்பதைக் காணலாம். காரணம் காலை உணவு நீண்ட நாட்களாகவே இல்லாமல் இருந்திருக்கும். அல்லது நேரம் கடந்து காலை உணவு சாப்பிடும் பழக்கம் இருக்கும். காலை எழுந்தது முதல் இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லது. அதிலும் 9 மணிக்குள் காலை உணவு எடுப்பது கட்டாயம். ஏதேனும் உடற்பயிற்சியை, உடற்பயிற்சியாகக் கொடுக்காமல் ஒரு விளையாட்டு போல் உருவாக்கி அந்த விளையாட்டில் பெற்றோர்களும் இணைந்தால் தானாகவே குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி கிடைத்துவிடும். இரவு 8 மணிக்குள் உணவு சாப்பிடும் பழக்கம், காலையில் உடற்பயிற்சி என பின்பற்றினால் கொஞ்சமும் மெனெக்கெடாமல் அவர்களை 10மணிக்கெல்லாம் தூக்கத்தில் ஆழ்த்திவிடலாம். குழந்தைகளுக்கு அதிக உடற்பயிற்சியும் தேவையில்லை, சில பெற்றோர்கள் அவர்கள் எடுத்துக்கொள்வது போல் கடினமான பயிற்சிகளைக் கொடுப்பதை பார்க்க முடிகிறது. அதெல்லாம் தேவையே இல்லை. சின்னச் சின்ன கை அசைவுகள், கால் அசைவுகள், ஓட்டம், ஸ்கிப்பிங், இவை போதுமானது. மற்ற நேரங்களில் வெளி ஆகாரங்கள் சாப்பிட்டால் கூட முடிந்தவரை இரவு உணவில் வீட்டு சாப்பாடு என கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நல்லது. அதே போல் தண்ணீர் முடிந்தவரை அதிகம் குடிப்பதை பழக்கப் படுத்துங்கள்.
– ஷாலினி நியூட்டன்
The post குழந்தைகளுக்கு டயட் தேவையா? appeared first on Dinakaran.