ஏலகிரி மலைக்கு சென்றபோது விபத்து 35 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 3 வாலிபர்கள் படுகாயம்

*வேலூரை சேர்ந்தவர்கள்

வாணியம்பாடி : ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றபோது, வாணியம்பாடி அருகே 35 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வேலூரை சேர்ந்த 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் கஷ்பா பகுதியை சேர்ந்தவர்கள் ரபிக் அகமது(30), சாதிக் அகமது(30), யாசின் அகமது(20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று வேலூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வழியாக ஏலகிரிக்கு சுற்றுலாவுக்காக ஒரே பைக்கில் வந்துள்ளனர்.

தொடர்ந்து, வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்தபோது, இவர்களது பின்னால் வந்த லாரி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், நிலை தடுமாறிய பைக் மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த யாசின் அகமது, சாதிக் அகமது ஆகியோர் மேம்பாலத்தில் இருந்து சுமார் 35 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர். பைக்கை ஓட்டி சென்ற ரபிக் அகமது பைக்குடன் தேசிய நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

இதில், 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும், வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், படுகாயம் அடைந்த சாதிக் அகமதுவை உடனடியாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் மயங்கி விழுந்த முதியவர்: வாணியம்பாடி புதூர் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சேவை சாலை வழியாக நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த ராமன்(60) திடீரென மயக்கம் அடைந்து சாலையில் கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஏலகிரி மலைக்கு சென்றபோது விபத்து 35 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 3 வாலிபர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: