கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த புதிய பாலம் 2ம் முறையாக இடிந்து விழுந்தது : விசாரணைக்கு உத்தரவிட்டார் பீகார் முதல்வர்!!

பாட்னா : பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டு வந்த பிரம்மாண்ட பாலம் மீண்டும் இடிந்து விழுந்தது குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாகல்பூர், ககாரியா மாவட்டங்களுக்கு இடையே கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.1,717 கோடி செலவில் 4 வழி பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. 3 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்ட இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு பலத்த காற்றுடன் பெய்த மழையால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த நிலையில், அந்த பாலத்தின் 2 பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் 2வது முறையாக திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. ஆற்றுப்பாலம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழும் காட்சிகளை கங்கை கரையோரம் நின்று கொண்டு இருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். கட்டுமானத்தின் தரம் குறித்து பொறியாளர்களின் அறிக்கை கிடைத்தவுடன் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

The post கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த புதிய பாலம் 2ம் முறையாக இடிந்து விழுந்தது : விசாரணைக்கு உத்தரவிட்டார் பீகார் முதல்வர்!! appeared first on Dinakaran.

Related Stories: