ரூ.4000 டிக்கெட் விலை ரூ.80,000 : ஒடிசா ரயில் விபத்தை லாப வெறிக்கு பயன்படுத்தும் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு : சு வெங்கடேசன்

பாலசோர் : கொடூரமான ரயில் விபத்தைக்கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு என மதுரை எம்.பி. சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் மாறி நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அந்த சமயத்தில் அருகே மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர் ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள் மோதியதில் அந்த ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை குடும்ப உறுப்பினர்கள் சென்று பார்ப்பதற்காக சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒடிசாவிற்குச் செல்லும் விமானங்களில் பயணச் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே! கொடூரமான ரயில் விபத்தைக் கூட லாப வெறிக்குப் பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை… 4000 ரூபாய் டிக்கெட் 24,000 முதல் 80,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரசு விமானம் இருந்தால் “வந்தே பாரத்”என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா!* கருணை இல்லா அரசே…* உறவினர் பயணக் கட்டணத்தை ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்!” எனத் தெரிவித்துள்ளார்.

The post ரூ.4000 டிக்கெட் விலை ரூ.80,000 : ஒடிசா ரயில் விபத்தை லாப வெறிக்கு பயன்படுத்தும் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு : சு வெங்கடேசன் appeared first on Dinakaran.

Related Stories: