கலைஞர் பிறந்தநாளையொட்டி ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்

 

ஈரோடு,ஜூன்5: ஈரோட்டில் கலைஞர் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு சென்னிமலை சாலை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்து, ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கினார்.

தொடர்ந்து கருணை இல்லத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், துண்டு, பெட்ஷீட் போன்றவற்றை நலத்திட்ட உதவியாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மணிராசு, வார்டு செயலாளர் சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, கலைஞர் நூறாவது பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பிலும்,அரசு சார்பிலும் ஓராண்டு காலம் கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த ஓராண்டிற்கு கட்சியின் சார்பில் மக்களுக்கு நலத்திட்ட வழங்கப்பட உள்ளது. மருத்துவ முகாம்கள்,விளையாட்டு, பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து இன்று கலெக்டருடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதையடுத்து தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்துவோம். கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடர்பாக மாறுபட்ட கருத்து மீண்டும் எழுந்துள்ளது. அதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து மனு அளிக்க 16 மாவட்ட அலுவலகங்களிலும் நேற்று கோரிக்கை மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், பெறப்படும் மனுக்கள் மீது ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கமிட்டியினர் ஆய்வு செய்து விரைவாக தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

The post கலைஞர் பிறந்தநாளையொட்டி ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: