புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதில் பிசி ரயில்கள் பாதுகாப்பில் பிரதமர் மோடி அலட்சியம்: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதில் பிசியாக இருந்ததால், ரயில் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தொடர் பதிவுகளில், “மோடி அரசு விளம்பரம் செய்வதிலும், மக்களை கவர்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. அரசுப் பணியை செயல்படுத்துவதில் வெறுமையே காணப்படுகிறது. ரயில்வே துறையில் உயரதிகாரிகள் பணியிடம் உள்பட 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பபடாதது ஏன்?

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் முதன்மை தலைமை இயக்க மேலாளர், சிக்னல் இணைப்புக் கோளாறு இருப்பதை கடந்த பிப்ரவரி 8ம் தேதி தெரிவித்தும், ஒன்றிய அரசு, ரயில்வே துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ரயில் பாதை புதுப்பிப்பு மற்றும பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி கணிசமான அளவு குறைக்கப்பட்டது ஏன்? பிரதமர் மோடி புதிய ரயில் திட்டங்கள், சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்து விளம்பரம் தேடுவதில் கவனம் செலுத்தியதால், ரயில்வே பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிட்டார்” என்று ஒன்றிய அரசு, பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சருக்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளார். இதனிடையே, காங்கிரஸ் எம்பி. சக்தி சிங் கோஹில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா அளித்த கூட்டு பேட்டியில் ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அப்படியானால், முதலில் ரயில்வே அமைச்சரில் இருந்து பிரதமர் மோடி தண்டிப்பதை தொடங்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

The post புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதில் பிசி ரயில்கள் பாதுகாப்பில் பிரதமர் மோடி அலட்சியம்: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: