ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி: முக்கிய தண்டவாளங்கள் தயாரானது

பாலசோர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடம் புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு, முக்கிய வழித்தடம் போக்குவரத்துக்கு தயாராகி இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். ஒடிசாவில் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் மாறி நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அந்த சமயத்தில் அருகே மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர் ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள் மோதியதில் அந்த ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்ததைத் தொடர்ந்து உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட தலைவர்களும் விபத்து பகுதியை நேரில் பார்வையிட்டனர்.இந்நிலையில், மீட்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தண்டவாள சீரமைப்பு பணிகள் நேற்று போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 2வது நாளாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த பகுதியிலேயே முகாமிட்டு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். தடம் புரண்ட 21 பெட்டிகளும் பெரிய கிரேன்கள் மூலமாக விபத்து பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து புதிய தண்டவாள கற்கள் அமைக்கப்பட்டன.

சுமார் 1000 ஊழியர்கள் இரவு பகலாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதில், இரு முக்கிய வழித்தடங்களும் சரி செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘’விபத்து நடந்து 16.45 மணி நேரத்தில் மெயின் அப்-லைன் (மேல்புற முக்கிய வழித்தடம்) தண்டவாளம் இணைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக ஹவுராவை இணைக்கும் டவுன் லைன் (கீழ்புற முக்கிய வழித்தடம்) 12 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது’’ என்றார். இதன்படி, இரு முக்கிய வழித்தடங்களில் ஒன்று போக்குவரத்துக்கு தயாராகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், 2 லூப்லைன் உட்பட 4 தண்டவாளங்களும் சரி செய்து மின்மயமாக்க அதிக நேரம் தேவைப்படும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

* 187 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

விபத்தில் உடைந்த ரயில் பெட்டிகளின் இரும்பு பாகங்களில் உடல்கள் சிக்கியிருக்கிறதா என்பதை சரிபார்க்க, அகற்றப்பட்ட பெட்டிகளில் நேற்று முழுமையான சோதனை நடத்தப்பட்டது. இதுவரை விபத்தில் பலியானவர்களில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 78 உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் பி.கே.ஜெனா கூறி உள்ளார். தற்போது 187 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. தலைமை செயலாளர் ஜெனா கூறுகையில், ‘‘உடல்களை சரியான முறையில் அடையாளம் காண்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. டிஎன்ஏ மாதிரி எடுக்கப்பட்டு, இறந்தவர்களின் புகைப்படங்கள் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.

* பலி 275 ஆக குறைப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆகவும் பின்னர் 295 ஆகவும் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பலி எண்ணிக்கையை 275 ஆக ஒடிசா மாநில அரசு நேற்று குறைத்தது. சில உடல்கள் இரு முறை எண்ணப்பட்டதாக தலைமை செயலாளர் பி.கே.ஜெனா கூறி உள்ளார். மேலும் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 1,175 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 793 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 382 பயணிகள் அரசு செலவில் சிகிச்சை பெற்று வருவதாக ஜெனா கூறி உள்ளார்.

* சொந்த ஊருக்கு நாளைக்குள் அனுப்ப ஏற்பாடு

விபத்து பகுதியில் முகாமிட்டுள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மீட்பு பணிகள் முடிந்து விட்டன. பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். நாளைக்குள் (6ம் தேதி) சிகிச்சை முடித்த அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்’’ என்றார்.

The post ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி: முக்கிய தண்டவாளங்கள் தயாரானது appeared first on Dinakaran.

Related Stories: