இம்ரான் வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை: பாக். அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: ராணுவ குடியிருப்பில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் அரசுக்கு ரூ.5,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தோஷகானா ஊழல் வழக்கில் ஆஜர் ஆவதற்கு கடந்த மாதம் 9ம் தேதி உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோது, அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றனர். இதை தொடர்ந்து இம்ரான்கான் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். அரசு சொத்துகள், போலீஸ் நிலையங்கள்தாக்கப்பட்டன. ராணுவத்தின் தலைமை அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து சூறையாடினர். ராணுவ ஜெனரல் ஒருவரின் வீடு எரிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் இது பற்றி பேசிய உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கூறுகையில்,‘‘ மே 9ம் தேதி நடந்த கலவரத்துக்கு இம்ரான்தான் முக்கிய காரணம்.அதனால் அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக பாதுகாப்பு துறை அமைச்சர் காஜா ஆசிப் கூறுகையில்,‘‘ இம்ரானுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்கள் கிடைத்தால் அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும். ஆனால் அவர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை’’ என்றார்.

The post இம்ரான் வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை: பாக். அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: