அநாதை இல்லத்தில் உணவு பரிமாறிய போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ந்த மகன்: ஜார்க்கண்டில் நெகிழ்ச்சி சம்பவம்

ராம்கர்: ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் விகாஸ் பகுதியை சேர்ந்தவர் டிங்கு வர்மா. இவரது மனைவி கடந்த 2013ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாய் இறந்து, தந்தை கைது செய்யப்பட்டதால் அவர்களது 3 வயது குழந்தை சிவம் யாருமற்ற அநாதையாக கைவிடப்பட்டான். தெய்வீக ஓம்கார் அமைப்பு நடத்தும் அநாதை இல்லத்தில் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் நடத்தும் பள்ளியிலேயே படித்து வந்தான். இதனிடையே சிறையிலிருந்து விடுதலையான டிங்கு வர்மா ஆட்டோ ஓட்டி சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இந்நிலையில் சிவம் வளர்ந்து வந்த அநாதை இல்லத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் உணவு சாப்பிட வந்த டிங்கு வர்மா உணவு பரிமாறிய தனது மகனை அடையாளம் கண்டார். அதே நேரத்தில் மகனும் தந்தையை அடையாளம் கண்டுகொண்டான். இருவரும் ஆரத்தழுவி, கண்ணீர் விட்டு, அன்பை பரிமாறி கொண்டனர்.

இதைக்கண்ட தெய்வீக ஓம்கார் அமைப்பு மேலாளர், அவர்கள் தந்தை, மகன் என்பதை உறுதி செய்த பின்னர், சிவத்தை டிங்கு வர்மாவுடன் அனுப்பி வைத்தார். இதுகுறித்து சிவம் கூறும்போது, “என் வாழ்நாளில் என் தந்தையை மீண்டும் பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இது நிச்சயம் கடவுள் செயல்தான்” என்றார். “இத்தனை நாட்கள் தன் மகனை நன்றாக வளர்த்து, படிக்க வைத்த தெய்வீக ஓம்கார் அமைப்புக்கு நன்றி” என்று டிங்கு வர்மா கூறினார்.

 

The post அநாதை இல்லத்தில் உணவு பரிமாறிய போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ந்த மகன்: ஜார்க்கண்டில் நெகிழ்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.

Related Stories: