வானிலை மையம் அறிவித்தபடி துவங்கவில்லை தென் மேற்கு பருவமழை மேலும் தாமதம்

புதுடெல்லி: வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி கேரளாவில் நேற்று தென் மேற்கு பருவ மழை துவங்கவில்லை. இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பிறகே பருவமழை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி வழக்கமாக துவங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஜூன் 4ம் தேதி(நேற்று) பருவ மழை தாமதமாக துவங்கும் என்று கடந்த மாதம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.

ஆனால், அந்த கணிப்பின்படி நேற்று தென் மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கவில்லை. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று வறண்ட வானிலையே காணப்பட்டது. அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் பருவ மழை துவங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் நேற்று அறிவித்தது. பசிபிக் பெருங்கடலில் உள்ள நீரின் வெப்பம் அதிகமாக இருப்பதால் எல் நினோ காலம் என்பதால் வழக்கத்தை விட கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர நாட்டின் பல பகுதிகளில் குறைவான பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. தற்போது பருவமழை மேலும் தாமதமாகி உள்ளதால், மழை அளவு கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும், கரீப் பருவ விதைப்பு பணிகள் மேலும் தாமதமாகும் எனவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு பருவமழை கடந்த ஆண்டு மே 29, 2021ல் ஜூன் 3, 2020 ஜூன் 1, 2019 ஜூன் 8 மற்றும் 2018 மே 29 அன்று கேரளாவில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

The post வானிலை மையம் அறிவித்தபடி துவங்கவில்லை தென் மேற்கு பருவமழை மேலும் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: