ஒடிசா ரயில் விபத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை?

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக் குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அவசர பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,’ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் அதுகுறித்த விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோன்று வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்கவும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தானியங்கி நவீன சிக்னல் கருவிகளை நிறுவ ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். முக்கியமாக விபத்து குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் உரிய பரிந்துரைகளை வகுத்து உடனடியாக அதனை அரசாணையாக வெளியிட ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு விடுமுறை கால அமர்வில் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.

The post ஒடிசா ரயில் விபத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை? appeared first on Dinakaran.

Related Stories: