வியாசர்பாடியில் போலீசார் வாகன சோதனை; உடலில் மறைத்து கொண்டு வந்த 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது

பெரம்பூர்: உடலில் மறைத்துவைத்து 2 கிலோ தங்க நகைகள் கொண்டுவந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.சென்னை எம்கேபி. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகே எம்கேபி. நகர் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அதிகாலை 4 மணி அளவில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இருந்த நபர் முன்னுக்குபின் முரணான பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபரை ஆட்டோவில் இருந்து இறக்கி சோதனை செய்தபோது அவரது உடலில் தங்க நகைகள் மறைத்துவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து இரண்டு கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வந்து விசாரணை நடத்தியதில் பிடிபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜு ராம் (24) என்பதும் சென்ைன சவுகார்பேட்டை வள்ளியப்பன் தெரு பகுதியில் வசித்துவருவதும் தெரியவந்தது. இதுசம்பந்தமாக எம்கேபி. நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தொடர்ந்து விசாரணை வருகின்றார். இதில், ராஜூராம், சவுகார்பேட்டை பகுதியில் இருந்து பார் தங்கத்தை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு எடுத்துச்சென்று அங்கு நகைகளை செய்து மீண்டும் பஸ் மூலம் மாதவரம் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் சவுகார்பேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியுள்ளார். அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

The post வியாசர்பாடியில் போலீசார் வாகன சோதனை; உடலில் மறைத்து கொண்டு வந்த 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: