ஒடிசாவில் விபத்தில் சிக்கிய 3 ரயில்களின் லோகோ பைலட், பாதுகாவலர்களின் நிலைமை என்ன?: தென்கிழக்கு ரயில்வே அதிகாரி பேட்டி

பாலசோர்: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் மூன்று ரயில்களின் லோகோ பைலட், பாதுகாவலர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாங்கா பஜார் நிலையம் அருகே கடந்த ெவள்ளிக்கிழமை இரவு, ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு, மற்றொரு தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பின்பக்க பெட்டிகள், வேறொரு தண்டவாளத்தில் உருண்டு விழுந்தன. அப்போது அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகளுடன் மோதி மீண்டும் விபத்தில் சிக்கியது. அதையடுத்து மூன்று தண்டவாளங்களிலும், மூன்று ரயில்கள் அடுத்தடுத்து சிக்கி கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில், 17 பெட்டிகள் தடம் புரண்டதால் 290க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த கோர விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்த பயங்கர விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை ரயில்வே அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இதில், விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பிரதான வழித்தடத்திற்கு பதிலாக, பஹாங்கா பஜார் நிலையத்திற்கு சற்று முன்புள்ள, ‘லூப் லைனை’ கடந்து சென்று அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளனது தெரிய வந்துள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. அந்த ரயில் ‘அப் லூப் லைனு’க்குள் நுழைந்து ‘லூப் லைனில்’ நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்டது. இதற்கிடையில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், ‘டவுன் மெயின் லைன்’ வழியாக கடக்க முயன்ற போது மற்றொரு விபத்தும் நடந்ததாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விபத்தில் பலியான ரயில்களின் லோகோ பைலட் (ஓட்டுனர்) மற்றும் பாதுகாவலர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வேயின் காரக்பூர் கோட்ட முதுநிலைப் பிரிவு வணிக மேலாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், ‘படுகாயமடைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், காவலாளி மற்றும் பெங்களூரு – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், காவலர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய சரக்கு ரயிலின் லோகோ பைலட், பாதுகாவலர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

The post ஒடிசாவில் விபத்தில் சிக்கிய 3 ரயில்களின் லோகோ பைலட், பாதுகாவலர்களின் நிலைமை என்ன?: தென்கிழக்கு ரயில்வே அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: