சொத்து தகராறில் அண்ணன் கொலை தம்பிக்கு ஆயுள் தண்டனை: சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜூன் 4: சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கொளத்தூர் காமராஜர் நகரில் வசித்தவர் பழனி. திருமணமானவர். இவரது தம்பி தமிழ்செல்வன், திருமணமாகாதவர். இவர் கீழ் தளத்திலும் பழனி மேல் தளத்திலும் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021 பிப்ரவரி 8ம் தேதி பழனி கீழ் தளத்தில் காம்பவுண்ட் அருகில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்போது அவரை தமிழ்செல்வன் திட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழ்செல்வன், தான் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பழனியின் வலது மார்பில் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மனைவி கவிதாவையும் தமிழ்செல்வன் தாக்கியுள்ளார். சிறிது நேரத்தில் பழனி இறந்துள்ளார். இதையடுத்து தமிழ்செல்வனை கைது செய்த கொளத்தூர் போலீசார் அவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் தமிழ்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும் ₹5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post சொத்து தகராறில் அண்ணன் கொலை தம்பிக்கு ஆயுள் தண்டனை: சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: