ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள்

வேலூர், ஜூன் 4: ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக வேலூர் மாவட்டத்தை சார்ந்த பயணிகள் மற்றும் உறவினர்கள் வேலூர் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலம், பாலாசோர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மேற்குவங்க மாநிலம், ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் 2 ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரயில்களில் பயணித்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை அவர்களின் உறவினர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 0416 2258016 என்ற தொலைபேசி எண்ணிலும், 9384056214 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று உதவி மையத்தில் டிஆர்ஓ ராமமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது, பணியில் இருந்தவர்களிடம் அவசர எண்ணிற்கு அழைப்பு விவரங்கள், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரயில் விபத்தில் சிக்கிய உள்ளார்களா? என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: