உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை குடியாத்தத்தில் சோகம் ‘என் ஆன்மா சாந்தி அடைய தந்தை குடிக்கக்கூடாது’

குடியாத்தம், ஜூன் 4: ‘என் ஆன்மா சாந்தி அடைய தந்தை குடிக்கக்கூடாது’ என பள்ளி மாணவி உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடியாத்தத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கற்பகம்(40). இவர்களது மகள் விஷ்ணுபிரியா(16), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், வீட்டில் மனைவியுடன் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தனது தந்தைக்கு குடிப்பழக்கம் இருப்பதால், விஷ்ணுபிரியா மனவருத்தத்தில் இருந்து வந்தாராம். இந்நிலையில், நேற்று விஷ்ணுபிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் விஷ்ணுபிரியா எழுதியிருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதை காண்பேனோ, அப்பொழுது தான் என் ஆன்மா சாந்தி அடையும். இப்படிக்கு பி.விஷ்ணுபிரியா. போயிட்டு வரேன்’ என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை குடியாத்தத்தில் சோகம் ‘என் ஆன்மா சாந்தி அடைய தந்தை குடிக்கக்கூடாது’ appeared first on Dinakaran.

Related Stories: