5,364 மீட்டர் உயரம் ஏறி எவரெஸ்ட் சிகரத்தில் கணவருடன் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம்: குமரியை சேர்ந்த பெண் அசத்தல்

புதுக்கடை: குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண், கணவருடன் எவரெஸ்ட்டில் ஏறி தனது 50ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். குமரி மாவட்டம் புதுக்கடை  அம்பாள் நகரைச் சேர்ந்தவர் இந்திரா, எம்.காம் பட்டதாரி. இவரது கணவர் சதீஷ் முருகன் நாகர்கோவிலை சேர்ந்தவர். கடந்த 2001-ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. எம்பிஏ பட்டதாரியான சதீஷ் 9 வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அதன்பின் துபாயில் ஒரு கம்பெனியில் மேலாளராக சேர்ந்தார். 2005-ல் இந்திராவும் கணவருடன் அங்கு சென்று ஒரு நிறுவனத்தில் 2022 வரை பணிபுரிந்துள்ளார். தற்போதும் அங்குதான் வசித்து வருகின்றனர்.

கடந்த மே 15ம் தேதி இந்த தம்பதி நேபாளத்தில் 5,364 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பகுதி வரை ஏறிச்சென்று சாதனை படைத்தனர். அங்கு இந்திரா தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதுபற்றி இந்திரா- சதிஷ் தம்பதி கூறியதாவது:
50 வயது என்பது முதுமை அல்ல. எந்த வயதிலும் சாதிக்கலாம். அதற்கு மன வலிமையும், விருப்பமுமே முக்கியம். எந்த பயிற்சியாளர்களையும் நாங்கள் நாடவில்லை. வீட்டு படிக்கட்டு சாய்வு உடற்பயிற்சி இயந்திரங்களில் தினமும் 3 மணி நேரம் பயிற்சி செய்வோம். சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டோம். அரபு எமிரேட்ஸ்-ல் உள்ள ராஸ் அல் கைமா, புஜைரா மற்றும் ஷார்ஜாவில் பல உள்ளூர் ஹைகிங் பயணங்களை குழுவினராக மேற்கொண்டோம். மலையின் உச்சியை அடைந்தபோது, ​​​​மூச்சடைக்கும் அனுபவம் ஏற்பட்டது. ஆனால் அந்த அழகிய காட்சி எல்லாவற்றையும் நன்மையாக்கியது.

அடுத்ததாக நாங்கள் ஜெர்மனி சென்று அங்குள்ள உயரமான மலைகளில் ஏறி சாதனை நிகழ்த்த உள்ளோம். துபாயில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மகன் ராகுல், 11-வது படிக்கும் மகள் பிரியங்கா எங்கள் சாதனைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இவ்வாறு கூறினர்.

The post 5,364 மீட்டர் உயரம் ஏறி எவரெஸ்ட் சிகரத்தில் கணவருடன் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம்: குமரியை சேர்ந்த பெண் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: