ரயில் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: பிரதமர் மோடி உறுதி

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி உடனடியாக விபத்து நடந்த பஹானகா நகருக்கு ஹெலிகாப்டரில் நேற்று விரைந்தார். பிற்பகலில் விபத்து நடந்த இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கு நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடன் சென்றனர். அங்கு மீட்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, சீரமைப்பு பணிகள் குறித்த முன்னேற்றங்களையும் கேட்டறிந்தார்.

பின்னர், காயமடைந்த பயணிகள் சிகிச்சை பெற்று வரும் பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். ஒவ்வொருவரிடமும் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும், பலியான பயணிகளின் உறவினர்கள் எந்த அசவுகரியத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘‘இந்த சம்பவத்தில் தவறு செய்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த யாரும் தப்ப முடியாது.இந்த துயரமான சமயத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்போம். விபத்தில் சிக்கியவர்களை மீட்க, இரவு முழுவதும் உதவி செய்த உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வலியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை, இந்த சூழ்நிலையை சமாளிக்க எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு வலிமை தரட்டும்’’ என்று கூறினார்.

The post ரயில் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: