தமிழ்நாடு பயணிகள் மீட்பு குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது பற்றி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை ஒடிசா அனுப்பி வைத்தார். ஒடிசா சென்ற அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். விபத்தில் சிக்கிய தமிழ்நாடு பயணிகள் நிலவரம் குறித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி அவர்களை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைப்பது குறித்தும் அப்போது ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்குடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்ற குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

அந்த நேரத்தில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ் மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பதாகவும், அவர்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். அதே போல் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் ஒடிசா வந்தால் அவர்களுக்கும் தேவைப்படும் உதவி ஒடிசா அரசு சார்பில் வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு குழுவிடம் அவர் தெரிவித்தார். அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்குடன் பேசினார்.

அப்போது விபத்து மீட்பு நடவடிக்கை குறித்தும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒடிசா அரசு எடுத்த நடவடிக்கையும் பாராட்டிய அவர், தமிழ்நாடு அரசு சார்பில் ஒடிசா முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது தொலைபேசியில் உறுதி அளித்தார். இதையடுத்து ஒடிசா முதல்வருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நன்றி தெரிவித்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது ஒடிசா முதல்வரின் தனிச்செயலாளரும், மதுரையை சேர்ந்தவருமான வி.கே. பாண்டியன் மற்றும் தமிழ்நாடு அரசு மூத்த அதிகாரிகள் பணிந்திரரெட்டி, குமார் ஜெயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தமிழ்நாடு பயணிகள் மீட்பு குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: