திருப்புவனம் வைகையாற்றில் குடில் அமைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு: 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிராம திருவிழா

திருப்புவனம்: திருப்புவனத்தில் உள்ள வைகையாற்றில் பச்சை ஓலையில் குடில் அமைத்து பூஜையறை பெட்டி வைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், பனையூரில் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 500 குடும்பத்தினர் மடப்புரம் காளியை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் வேலை நிமித்தமாக திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்புவனம் வைகை ஆற்றில் ஒன்று கூடி புஸ்பவனேஸ்வரர் கோயிலுக்கு எதிரே, மடப்புரம் காளி கோயிலை நோக்கி பச்சை ஓலையில் குடிசை அமைத்து, முக்கனி விழா என்ற பெயரில் காளியை வணங்கி வழிபடுவர்.

இதன்படி, இந்தாண்டு திருவிழா நேற்று மாலை திருப்புவனம் வைகை ஆற்றில் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வைகை ஆற்றில் தங்கி சுத்தம் செய்து, பச்சை ஓலையில் குடிசை அமைத்தனர். இந்த குடிசையில் பூஜையறை பெட்டியை வைத்து விடிய விடிய வழிபட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த குடிசையில் இருந்து அம்மன் கரகம் எடுத்து ஊர்வலமாக பனையூர் நோக்கி 12 கி.மீ தூரம் நடந்து சென்றனர். இன்று மாலை பனையூரில் விழா நடைபெறுகிறது. இன்று நள்ளிரவில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நாளை 81 கிடா வெட்டி அன்னதானம் நடைபெறுகிறது.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘மடப்புரம் காளி கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து சென்று பனையூரில் கோயில் கட்டி குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். 5 வருடத்திற்கு ஒருமுறை மடப்புரம்-திருப்புவனம் இடையே வைகை ஆற்றில் இருந்து பச்சை ஓலை குடிசை அமைத்து இங்கிருந்து கரகம் எடுத்து அம்மனை சுமந்து பனையூர் சென்று விழா நடத்துவோம். இந்த குலதெய்வ வழிபாட்டிற்காக நாங்கள் எங்கிருந்தாலும் வந்து சேர்ந்து விடுவோம்’ என்றனர்.

வைகையாற்றில் விடிய விடிய நடைபெறும் திருவிழாவின்போது வரன் பேசி முடிவு செய்து கொள்கின்றனர். உறவுகளிடையே ஏற்பட்ட சண்டை, சச்சரவுகளை மறந்து சமாதானமாகி ஒன்று கூடும் இந்த திருவிழா தமிழர்களின் கலச்சார விழாக்களில் ஒன்றாக திகழ்கிறது.

The post திருப்புவனம் வைகையாற்றில் குடில் அமைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு: 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிராம திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: