ஒடிசாவில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து.. பாதுகாப்பு குறைபாடே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

புபனேஷ்வர்: ஒடிசாவில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 1981-க்கு பின் இந்தியளவில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது.

பாகநாகாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு பாதுகாப்பே குறைபாடே காரணம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரயில்களில் ஒன்று, நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

இதுபோன்ற விபத்து தொடர்பான வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள். எனக்குத் தெரிந்த வரை ரயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை. பாதுகாப்பு கருவி ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. இறந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது. ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

The post ஒடிசாவில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து.. பாதுகாப்பு குறைபாடே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: