₹1.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் எரிவாயு தகன மேடை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு குடியாத்தம் நகராட்சி பகுதியில்

குடியாத்தம், ஜூன் 3: குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா, வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா, கலெக்டர் குமாரவேல் பாண்டியனுடன் முகாம் அலுவலகத்தில் திட்ட பணிகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட குடியாத்தம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

அதில் குடியாத்தம் நகராட்சி, வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ₹36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா, சுண்ணாம்பு பேட்டை பகுதியில் ₹1.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை, தங்கம் நகரில் நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திடக்கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம். குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்தாங்கல் ஊராட்சி புதூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 15.025 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரிசு நில மேம்பாட்டு பணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II ன்கீழ் ₹6.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சமையலறை கூடம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவிற்கான சமையல் பொருட்களின் தரம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு செய்து, சமைக்கப்பட்ட உணவினை சுவைத்து தரத்தினை சோதனை செய்தார். இதனைத்தொடர்ந்து, குடியாத்தம் அடுத்த மோடி குப்பம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறை, பிரசவத்திற்குபின் தங்கும் அறை, பரிசோதனை கூடம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, செயற்பொறியாளர் செந்தில், வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) டாக்டர் பானுமதி, குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கட்ராமன், நகராட்சித் தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விமல் குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post ₹1.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் எரிவாயு தகன மேடை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு குடியாத்தம் நகராட்சி பகுதியில் appeared first on Dinakaran.

Related Stories: