(தி.மலை) மாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா சின்னபுத்தூர் கிராமத்தில்

கண்ணமங்கலம், ஜூன் 3: சின்னபுத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. கண்ணமங்கலம் அடுத்த சின்னபுத்தூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நூற்றாண்டு பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வந்து வணங்கினால் கண் பார்வை குறைபாடு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது ஐதீகம். இக்கோயிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை மாரியம்மன் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறும். இதன்படி நேற்று நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கூழ்வார்த்தும், அலகு குத்தி தேர் இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினார்கள். இளைஞர்கள் மார்பில் எலுமிச்சம் பழம் குத்தி ஆறு அடி கொக்காலி கட்டை மேல் நடனம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். மாலை 4 மணிக்கு குழந்தை செல்வம் வேண்டுகிற பக்தர்களுக்கு அம்மன் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் குழந்தை பாக்கியம் இல்லாத மகளிர் மடி பிச்சை ஏந்தி அம்மன் பிரசாதம் பெற்றனர். இதனைத்தொடர்ந்து இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. விழாவில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துசாமி, செயல் அலுவலர் சிவாஜி, அறங்காவலர் குழு தலைவர் சங்கராயன், விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post (தி.மலை) மாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா சின்னபுத்தூர் கிராமத்தில் appeared first on Dinakaran.

Related Stories: