வனப்பரப்பை அதிகரிக்க 7.16 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி

நாமக்கல், ஜூன்3: நாமக்கல் மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க 7.16 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தின் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுக்குள் 33 சதவீதமாக அதிகப்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வனப்பரப்பை அதிகப்படுத்த, பசுமை தமிழகம் என்ற பெயரில், தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்கள் என வாய்ப்புள்ள இடங்களில மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை அதிகப்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தின் வனப்பரப்பு தற்போது 15 சதவீதமாக இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் 8 வனச்சரகங்கள் அமைந்துள்ளது.

கொல்லிமலை, போதமலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. அத்தனூரில் வனவியல் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்த,மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருமலைப்பட்டி, கெஜகோம்பை போன்ற பகுதியில் உள்ள 100 ஹெக்டேர் தரிசு நிலங்கள், காப்பு நிலமாக மாற்றப்பட்டு, வனத்துறையின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தவும், பசுமை நாமக்கல் என்ற நிலையை அடையவும், தேவையான இடங்களில் மரக்கன்றுகள் நட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜாங்கம் கூறியதாவது: மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்த, வனத்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராசிபுரம், எருமப்பட்டி, புதுப்பாளையம், சுண்டக்காடு, கொல்லிமலை, சோளக்காடு, செம்மேடு, அத்தனூர், தண்ணீர்பந்தல்காடு உள்ளிட்ட 11 இடங்களில், 7.16 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வேம்பு, புங்கன், தேக்கு, நெல்லி, புளி, ஆல், அரசு, நாவல் போன்ற செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவை 13 அரசுத்துறைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 78 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. மேலும் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, மாவட்டத்தில் ஒரே நேரத்தில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறை அமைச்சரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. எந்த இடத்தில் நடுவது என்பது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்படும். மரக்கன்று நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து, பள்ளி மாணவ, மாணவியர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வனத்துறை மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்தார்.

The post வனப்பரப்பை அதிகரிக்க 7.16 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி appeared first on Dinakaran.

Related Stories: