கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் ஆணவக்கொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்ற வேண்டும்

சென்னை: சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம், ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவன் கோகுல்ராஜ் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக கொடூரமான முறையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கடந்த ஆண்டு யுவராஜூக்கும் அவரது கார் ஓட்டுநருக்கும் சாகும்வரை 3 ஆயுள் சிறை தண்டனையும், எஞ்சிய 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்தனர்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று (நேற்று) வழங்கிய தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இத்தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் சாதிவெறியர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்புகிறோம். சமீபத்தில் கூட கிருஷ்ணகிரியில் சாதி ஆணவப் படுகொலை நடந்தது. எனவே, தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் ஆணவக்கொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: