இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட 5 திட்டங்கள் அமல்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் 5 கேரண்டி திட்டங்களை அறிவித்தது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, 200 அலகு இலவச மின்சாரம், பிபிஎல் கார்டு தாரர்களுக்கு 10 கிலோ அரிசி, பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 நிதியுதவி, டிப்ளமா பட்டதாரிகளுக்கு இரண்டாண்டுக்கு மாதம் ரூ.1500, மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்று இலவசங்களை அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இத்திட்டங்கள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி அனைவருக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது, ‘காங்கிரஸ் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் சென்றடையும். குடும்பத்தலைவிகள் மாதம் ரூ.2000 நிதியுதவி பெற ஆதார், வங்கி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை பெறப்படும். ஆகஸ்ட் 15 முதல் அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஜூலை 1 முதல் அந்தியோதியா கார்டுதாரர்கள் 10 கிலோ இலவச அரிசி பெறலாம். மகளிர் இலவச பயணம் ஜூன் 11 முதல் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் படி மகளிர் ஏசி மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பஸ்களை தவிர சாதாரண பஸ்களில் பயணிக்கலாம்’என்றார்.

The post இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட 5 திட்டங்கள் அமல்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: