அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு; நோட்டு புத்தகங்கள் விலை 10% உயர்ந்தது: கைடு விலையும் அதிகரிப்பு

நெல்லை: அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நோட்டு புத்தகங்கள் விலை கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுறைக்கு பிறகு வருகிற 7ம் ேததி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து பள்ளிகளில் புதிதாக மாணவர் சேர்க்கை பணிகள், தற்போது மும்முரமாக நடைபெறுகின்றன. மேலும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், கைடுகள் மற்றும் எழுதுப்பொருட்கள், ஸ்கூல் பேக்குகள், டிபன் கேரியர்கள் போன்றவை விற்பனையும் களை கட்டத் தொடங்கியுள்ளன. சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நோட்டு புத்தகங்கள், நெல்லையில் உள்ள ஸ்டேஷனரி கடைகளில் குவிந்து வருகின்றன. ஆனால் இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா காலத்தின்போது ஸ்டேஷனரி மற்றும் நோட்டு புத்தகங்களின் தேவை வெகுவாக குறைந்தது. ஆனால் கடந்த ஆண்டு நேரடி வகுப்புகள் தொடங்கிய போது நோட்டு புத்தகங்களின் தேவை உயர்ந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு 20 முதல் 30 சதவீதம் வரை நோட்டு புத்தகங்கள் விலை உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது புதிய கல்வியாண்டிற்கு சராசரியாக 10 சதவீதம் வரை நோட்டு புத்தகம் விலை உயர்ந்துள்ளது. 400 பக்கம் கொண்ட ‘லாங் சைஸ்’ நோட்டு புத்தகம் 200 ரூபாயில் இருந்து ரூ.225ஆக உயர்ந்துள்ளது. மற்ற நோட்டுகளின் விலையும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. நோட்டு புத்தகங்கள் மட்டுமின்றி உரைநடை (கைடு) புத்தகங்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நோட்டு புத்தக வியாபாரிகள் கூறுகையில், ‘9 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய கைடு நூல்கள் விலை கடந்த 2 ஆண்டாக உயர்ந்து வருகிறது. முன்னர் 500 ரூபாயில் அனைத்து பாடங்களுக்கும் உள்ள உரைநடை (கைடு) புத்தகங்களை வாங்கும் அளவிற்கு பட்ஜெட் விலை இருந்தது. இப்போது ஒரு உரைநடை பாடப்புத்தகமே 500 ரூபாயை நெருங்கியுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களில் உள்ள உரைநடை நூல்களுக்கு வரவேற்பு உள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது. விலை குறைவாக உள்ள உரைநடை நூல்களில் உள்ள தாள்களின் தரம் சற்று குறைவாகவே உள்ளது. ஸ்டேஷனரி பொருட்கள் விலையில் பெரிய மாற்றம் இல்லை. தற்போதுவரை கடந்த ஆண்டு விலையிலேயே விற்பனைக்கு வந்துள்ளன,’ என்றனர்.

The post அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு; நோட்டு புத்தகங்கள் விலை 10% உயர்ந்தது: கைடு விலையும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: