புதிதாக கடை திறக்க இருந்த நிலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி வாலிபர் பலி: வாகனங்கள் சேதம்


அம்பத்தூர்: அம்பத்தூர் பகுதியில் புதிதாக கடை திறக்க இருந்த வாலிபர், தறிகெட்டு ஓடிய கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மற்றொருவர் படுகாயமடைந்தார். அம்பத்தூர் அடுத்த புதூர் பானு நகர் 27வது அவென்யூவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (53). இவர் வாகனங்களுக்கான பேட்டரி கடையை அப்பகுதியில் நேற்று திறப்பதற்கு திட்டமிட்டு இருந்தார். அதற்கான பணிகளை தனது மகன் முகமது சுகைல் (18), நண்பர்கள் கண்ணதாசன், சந்தோஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து ரகுமான் செய்து வந்தார். பணிகள் முடிந்து நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டுக்குச் செல்வதற்காக கடையை பூட்டிவிட்டு 4 பேரும் வெளியே வந்தனர்.

அப்போது, கடை திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று அப்துல் ரகுமான், முகமது சுகைல், கண்ணதாசன், சந்தோஷ் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் முகமது சுகைல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் கண்ணதாசனுக்கு வலது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்த இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதிய கார், கடைசியில் மின்கம்பத்தில் மோதி நின்றது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்ணதாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த கள்ளிக்குப்பம், கிழக்கு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மில்லர் (38) என்பவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் ஜார்ஜ் மில்லரை ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ஜார்ஜ்மில்லரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

* கார் மோதி கம்பெனி ஊழியர் சாவு
அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜி (46). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பணி முடிந்து மேனாம்பேடு கருக்கு பூங்கா எதிரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக அந்த சாலையில் கார், ராஜி மீது பயங்கரமாக மோதியது. தூக்கி வீசப்பட்ட அவரது தலைமீது காரின் வலதுபக்க டயர் ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், ராஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த கொளத்தூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த சஞ்சீவராவ் (27) என்பவரை கைது செய்தனர்.

The post புதிதாக கடை திறக்க இருந்த நிலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி வாலிபர் பலி: வாகனங்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: