மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு புத்தகத்தில் ஜனநாயகம் குறித்த பாடம் நீக்கம்: ஒன்றிய அரசு நடவடிக்கையால் சர்ச்சை

புதுடெல்லி: தனிமங்களின் வரிசை அட்டவணை, அரசியல் கட்சிகள், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்த பாடங்களை 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி நீக்கி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் பள்ளிக் கல்வி பாடப் புத்தகங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பு தயாரிக்கும் பாட புத்தகங்களையே, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் சில மாநில கல்வி வாரியங்கள் பயன்படுத்துகின்றன.

சமீபகாலமாக, பாடப்புத்தகங்களில் இருந்து பல்வேறு பகுதிகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கி வருகிறது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கவும் மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பாடங்களை குறைக்கவும், அனுபவ கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் பாடத்திட்டங்கள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, 12ம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து குஜராத் கலவரம், முகலாயப் பேரரசு தொடர்பான பகுதிகள், அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து மகாத்மா காந்தி மற்றும் கோட்சே தொடர்பான பகுதிகள் மற்றும் 6,7 மற்றும் 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நெசவு மற்றும் கைத்தறி தொடர்பான பாடங்கள், 6ம் வகுப்பு வரலாற்று பாடத்தில் மகாத்மா காந்தி மற்றும் ராட்டை பற்றிய பகுதிகள், 9 மற்றும் 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு தொடர்பான பகுதி ஆகியவை நீக்கப்பட்டன.

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி பாடப்பகுதிகள் நீக்கப்படுவது பாஜ தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட என்.சி.இ.ஆர்.டி. டப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஏறக்குறைய 30% பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும் பாடங்களை நீக்குவதை என்.சி.இ.ஆர்.டி தற்போது வழக்கமாக கொண்டுள்ளது. அதில் 10ம் வகுப்பு அறிவியல் பாடத்திலிருந்து தனிமங்களின் வரிசை அட்டவணை நீக்கப்பட்டுள்ளது. சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து அரசியல் கட்சிகள், ஜனநாயகத்திற்கு உள்ள சவால்கள் போன்ற பாடப் பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. பாஜ. தனது அரசியல் கொள்கையை பாடத்திட்டத்தில் புகுத்துவதாக எதிர்க்கட்சிகள் இதனை விமர்சித்துள்ளன.

ஒன்றிய கல்வி அமைச்சர் சப்பை கட்டு
ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கூறுகையில், “கொரோனா தொற்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் குறிப்பிட்ட சில பாடங்கள் கைவிடப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்தால் அதில் தனிம வரிசை அட்டவணை மற்றும் டார்வினின் பரிணாமக் கோட்பாடு ஆகியவற்றைப் படிக்கலாம். எனவே, இது பற்றி பொய் பிரசாரம் செய்ய வேண்டாம்,” என கூறியுள்ளார்.

The post மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு புத்தகத்தில் ஜனநாயகம் குறித்த பாடம் நீக்கம்: ஒன்றிய அரசு நடவடிக்கையால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: