வியாசர்பாடியில் உள்ள சாலையோர குப்பை குவியலில் தீவிபத்து: கடும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பூர்: வியாசர்பாடியில் குப்பை குவியலில் ஏற்பட்ட தீ விபத்தில், கடும் புகைமூட்டம் எழுந்ததையடுத்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். நேற்று மாலை வியாசர்பாடி பகுதியில் இருந்து மூலக்கொத்தளம் செல்லும் வழியில் சாலையின் இருப்புறங்களிலும் குப்பை குவியல்கள் அதிகமாக இருந்தன. இதில் பேசின் பிரிட்ஜ் ரோடு மின்சார வாரிய அலுவலகம் அருகே கொட்டப்பட்டிருந்த குப்பை குவியலில் 4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கோடை வெயிலில் காய்ந்து போயிருந்த குப்பைகள், மரக்கிளைகள் அனைத்தும் இதில் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை மற்றும் முல்லைநகர் என 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தால் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்க ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள சுவாசக் கோளாறால் சிறிது நேரம் அவதிக்குள்ளாகினர்.

The post வியாசர்பாடியில் உள்ள சாலையோர குப்பை குவியலில் தீவிபத்து: கடும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: