மேகதாது விவகாரத்தை சகோதர பாசத்துடன் பேசி தீர்க்க வேண்டும்: டி.கே.சிவகுமார் அழைப்பு

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை சகோதர பாசத்துடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்தார். கர்நாடகாவில் கடந்த பாஜ ஆட்சியில் மேகதாது திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதில் துணைமுதல்வர் மற்றும் நீர்ப்பாசன துறை அமைச்சராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்றதை தொடர்ந்து, மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான விவரம் பெற்றதுடன், திட்டம் செயல்படுத்தும் பணியை துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டார். டி.கே.சிவகுமாரின் முடிவுக்கு தமிழ்நாடு நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தி வெளிப்படுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.சிவகுமார் கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பது பல ஆண்டுகளாக கனவு திட்டமாகும். மழைகாலத்தில் கர்நாடக அணைகள் தவிர தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் மற்றும் கல்லணை ஆகிய அணைகள் நிரம்பி, வீணாக பல நூறு டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவதின் மூலம் 50 டிஎம்சிக்கும் அதிகம் தண்ணீர் சேமித்து வைத்தால், அணைகளின் நீர் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் இரு மாநிலங்களும் பயன்படுத்தி கொள்ள முடியும். பல ஆண்டுகளாக இந்த திட்டத்திற்காக இரு மாநிலங்களும் சண்டையிட்டது போதும். தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் எண்ணம் எங்களுக்கு கிடையாது.

மேகதாது அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் தமிழ்நாடு விவசாயிகளுக்கும் பயன்தரும். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு நியாயமானதாக இருந்தாலும் அணை கட்டுவதின் மூலம் ஏற்படும் சாதக-பாதகம் குறித்து இரு மாநில அரசுகள் அமர்ந்து முழுமையாக அலசி ஆராய்ந்தால் மட்டுமே உண்மை தெரியும். இந்த விஷயத்தில் சகோதர பாசத்துடன் பேசி தீர்வு காண முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மேகதாது விவகாரத்தை சகோதர பாசத்துடன் பேசி தீர்க்க வேண்டும்: டி.கே.சிவகுமார் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: