பள்ளத்தில் தடுமாறி விழுந்து விஏஓ பலி குடியாத்தம் அருகே பைக்கில் சென்றபோது

குடியாத்தம், ஜூன் 2: குடியாத்தம் அருகே பைக்கில் சென்றபோது சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் தடுமாறி விழுந்து விஏஓ பரிதாபமாக பலியானார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(50), இவர் குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட மூங்கப்பட்டு கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு பணிக்கு வந்துள்ளார். விஏஓ சங்க நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பியுள்ளார். பின்னர் மாலை மீண்டும் குடியாத்தம் நகரம் வருவதற்காக பைக்கில் குடியாத்தம்- மாதனூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்குடன் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தடுமாறி விழுந்துள்ளார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விஏஓ பெருமாள் இறப்பு குறித்து தகவல் அறிந்த விஏஓ சங்க மாவட்ட தலைவர் ஜீவா தலைமையிலான விஏஓக்கள், குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கட்ராமன் மற்றும் வருவாய் துறையினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

The post பள்ளத்தில் தடுமாறி விழுந்து விஏஓ பலி குடியாத்தம் அருகே பைக்கில் சென்றபோது appeared first on Dinakaran.

Related Stories: