ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி:வங்கியில் ரூ.2000 நோட்டுக்களை எவ்வித அடையாள அட்டைகளும் இல்லாமல் மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு விசாரிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாக ரிசர்வ் வங்கி கடந்த 21ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. அதேநேரத்தில் ரூ.2,000 நோட்டுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘‘ரூ.2000 நோட்டுக்களை எந்த அடிப்படை அடையாள அட்டையும் இல்லாமல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால அமர்வு நீதிபதி துலியா தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரான வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா வாதத்தில், ‘‘ரூ.2000 நோட்டுக்களை அடையாள அட்டைகள் இல்லாமல் வழங்குவதால் குண்டர்கள், மணல் மாபியா ஆகியோர் சட்ட விரோதமாக ரூபாய் நோட்டுக்களை எளிமையான முறையில் மாற்றி செல்கின்றனர்.

இந்த விவகாரத்தில் ஒரு வரையறையுடன் கூடிய உத்தரவை உச்ச நீதிமன்றம் அவசரமாக பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, ‘இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அமர்வால் கண்டிப்பாக விசாரிக்க முடியாது. வேண்டுமென்றால் விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றம் முழுமையாக திறந்த பின்னர் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடுங்கள்’ என உத்தரவிட்டார்.இதையடுத்து மனுதாரர் இந்த உத்தரவை ஏற்பதாக தெரிவித்தார்.

The post ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: