மணிப்பூர் கலவர விவகாரம்; உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பிரச்னையில் நாகா, குக்கி, மெய்டீஸ் இன மக்கள் மோதிக்கொண்டனர். இதனால் கடந்த ஒரு மாதமாக மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக மே 29ம் தேதி மணிப்பூர் சென்றார். கலவரம் பாதித்த பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இம்பாலில் நேற்று அமித்ஷா கூறியதாவது:
மணிப்பூர் கலவர விவகாரத்தில் உன்மை நிலவரத்தை கண்டறியும் விதமாக உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும். இதுதொடர்பான விவரங்கள் மிகவிரைவில் அறிவிக்கப்படும். அதே போன்று மணிப்பூர் கவர்னர் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள், நாகா, குக்கி மற்றும் மெய்டீஸ் சமூக பிரமுகர்கள் இணைந்த அமைதி குழு அமைக்கப்படும். மணிப்பூரில் நடந்த வன்முறையின் பின்னணியில் 5 கிரிமினல் சதி மற்றும் ஒரு பொதுவான சதி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான 6 முக்கிய வழக்குகளை மட்டும் சிபிஐ விசாரிக்கும்.

மணிப்பூரில் உள்ள அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து செயல்பட ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திலிருந்து ஒரு இணைச் செயலர் நிலை அதிகாரியும், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 5 இயக்குனர் நிலை அதிகாரிகளும் இங்கு பணியமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பலியானவர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் நேரடியாக அனுப்பப்படும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர் குழு ஒன்றிய அரசு அனுப்பும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய டிஜிபியாக ராஜீவ்சிங் நியமனம்
மணிப்பூர் மாநில புதிய டிஜிபியாக ராஜீவ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திரிபுரா மாநில கேடரை சேர்ந்தவர். 1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் 3 வருடங்களுக்கு சிறப்பு அனுமதி பெயரில் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் டிஜிபியாக இருந்த பி. டவுங்கல் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதுவரை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post மணிப்பூர் கலவர விவகாரம்; உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: