இந்தியா-நேபாளம் இடையே எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேற்று அவர் சந்தித்து பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் பற்றி கலந்து ஆலோசித்தார். அதன் பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, உத்தர பிரதேசத்தின் ரூபைதிகா மற்றும் நேபாளத்தின் நேபாள்கன்ஜ் இடையே சர்வதேச எல்லையில் சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் வசதிக்காக ஒருங்கிணைந்த சோதனை சாவடிகளை காணொலி மூலம் திறந்து வைத்தனர். ரூபைதியா சாவடி 115 ஏக்கர் பரப்பளவில் ₹200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

அதே போல், பீகாரின் பத்னாகா மற்றும் நேபாள் கஸ்டம் யார்டு வரையிலான சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை இருநாட்டு தலைவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா-நேபாளம் இடையே போக்குவரத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளிடையே நீண்ட கால மின் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மதம் மற்றும் கலாச்சார உறவுகள் மிகவும் பழமையானது, வலுவானது. இந்த உறவுகளை இமாலய உச்சிக்கு கொண்டு செல்ல இருதரப்பு அரசுகளும் பாடுபடும். இதே ஆர்வத்துடன், எல்லை பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். இதற்காக பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

The post இந்தியா-நேபாளம் இடையே எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: