ஒருவருடத்திற்கு மேலாக லீவு 62 அரசு டாக்டர்களுக்கு நோட்டீஸ்: பீகார் அரசு டிஸ்மிஸ் எச்சரிக்கை

பாட்னா: பீகாரில் அங்கீகரிக்கப்படாத விடுப்பில் ஒருவருடத்திற்கு மேல் உள்ள 62 அரசு மருத்துவர்களுக்கு மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் உரிய காரணங்கள் ஏதுமின்றி, அங்கீகரிக்கப்படாத நீண்டநாள் விடுப்பில் சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் அராரியா, அவுரங்காபாத், தர்பங்கா, பங்கா, பகல்பூர், ஜோர்பூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உரிய காரணமின்றி மாதக்கணக்கில் விடுப்பில் சென்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து 64 அரசு டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அரசின் கடும் நடவடிக்கைக்கு பிறகும் இதே அவலநிலை பீகாரில் தொடர்கிறது. தற்போது தலைநகர் பாட்னா அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 14 மருத்துவர்கள், பக்சர், போஜ்பூர், ரோஹ்தஸ், ஜமுய் மற்றும் கைமூர் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் 62 மருத்துவர்கள் உரிய காரணம் இன்றி பல ஆண்டுகளாக விடுமுறையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மருத்துவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மாநில சுகாதாரத்துறை இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள மருத்துவர்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநில அரசு, இல்லையெனில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post ஒருவருடத்திற்கு மேலாக லீவு 62 அரசு டாக்டர்களுக்கு நோட்டீஸ்: பீகார் அரசு டிஸ்மிஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: