யார்டில் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் புகுந்து கேரள ரயிலுக்கு மீண்டும் தீ வைப்பு: கையில் கேனுடன் சுற்றிய ஆசாமி யார்? என்ஐஏ, புலனாய்வு அமைப்பு விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஏற்கனவே தீவைக்கப்பட்ட ரயிலுக்கு நேற்று கண்ணூர் ரயில் நிலையத்தில் வைத்து மர்மநபர்கள் மீண்டும் தீவைத்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் இடையே தினமும் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு ஆலப்புழாவிலிருந்து வந்த இந்த ரயில் கண்ணூர் 3வது நடைமேடை அருகே உள்ள யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த ரயிலின் கடைசியில் இருந்து 3வது பெட்டியில் திடீரென தீ பிடித்தது. 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து விட்டது.

இதுதொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த பகுதியில் கையில் கேனுடன் மர்ம நபர் ஒருவர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் அந்தப் பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை கல்லால் உடைத்து பெட்ரோலை உள்ளே ஊற்றி தீ வைத்தது தெரியவந்துள்ளது. உடைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடிக்கு அருகே கிடந்த கல்லை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு ரயில் பெட்டி முற்றிலுமாக எரியும் அளவுக்கு தீ பிடித்துள்ளதால் பெட்ரோலுடன் வேகமாக தீ பிடிக்கும் வகையில் வேறு ஏதாவது பொருளையும் அந்த நபர் கொண்டு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எரிக்கப்பட்ட ரயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் பாரத் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய கிட்டங்கி உள்ளது. இங்கு பல ராட்சத கொள்கலன்களில் லட்சக்கணக்கான லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். இங்கு தீ பரவியிருந்தால் கண்ணூரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ மற்றும் ஒன்றிய புலனாய்வு அமைப்பான ஐபி ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன.

இதே ரயில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஆலப்புழாவிலிருந்து கண்ணூருக்கு புறப்பட்டபோது டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் உயிருக்குப் பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது அந்த ரயில் எலத்தூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் கிட்டங்கி அருகே சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த சம்பவமும் திட்டமிட்டு பெரும் நாசவேலை நடத்துவதற்கான சதியாக இருந்திருக்கலாம் என்று கருதப்பட்டதால் தான் என்ஐஏ விசாரணையை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

* உபி வாலிபரை பிடித்து விசாரணை
ரயில் தீவைப்பு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய ஆய்வில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீப காலமாக கண்ணூர் ரயில் நிலையம் அருகே அடிக்கடி நடமாடி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் ரயில் நிலையம் அருகே குப்பைகளை போட்டு தீ வைத்தார். இது குறித்து கண்ணூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதன் பின்னர் அந்த வாலிபரை போலீசார் விட்டு விட்டனர். அதே நபர் தான் தற்போதும் போலீசிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

The post யார்டில் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் புகுந்து கேரள ரயிலுக்கு மீண்டும் தீ வைப்பு: கையில் கேனுடன் சுற்றிய ஆசாமி யார்? என்ஐஏ, புலனாய்வு அமைப்பு விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: